தேவகோட்டை ரஸ்தா பாலம் கட்டுமிடத்தில் கடினப் பாறைகள்: காரைக்குடி-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பணியில் சுணக்கம்

காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில் மேம்பாலம் அமைப்பதில் கடினமான பாறைகள்

காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில் மேம்பாலம் அமைப்பதில் கடினமான பாறைகள் தடையாக இருப்பதால், திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திருச்சியிலிருந்து ராமேசுவரம் வரை 188 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிச் சாலையாக (தேசிய நெடுஞ்சாலை எண்-210 ) அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை 108 கிலோ மீட்டர் தூரம் வரை முதல் கட்டப்பணி முடிந்து போக்குவரத்துப் பயன்பாட் டில் உள்ளது.  
  இதையடுத்து, இரண்டாம் கட்டமாக காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரையில்  80 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.355.90 கோடியில் சாலை அமைக்க கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் தொடங்கின. இப்பணியை 30 மாதங்களில், அதாவது வரும் 2020 ஏப்ரல் 28 -க்குள் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 
   இப்பணியில் சிறிய, நடுத்தரப்பாலங்கள் அமைக்கும்பணி முடிவடைந்துள்ளது. தேவகோட்டை ரஸ்தா ரயில் பாதையை கடந்துசெல்ல அங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பிரமாண்டமான தூண்கள் அமைப்பதற்காக ஆழப்படுத்தும்போது  கடினமான பாறைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் பணிகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட காலத்திற்குள் பணியை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
  இதுகுறித்து காரைக்குடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (நகாய்) 210 திட்ட இயக்குநர் எஸ்.எஸ். பாஸ்கரன் கூறியதாவது: காரைக்குடி-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. தேவகோட்டை ரஸ்தா பாலம் அமைக்கும் பகுதியில் தூண்கள் நிறுவுவதற்காக ஆழப்படுத்துவதற்கு அப்பகுதியில் மிகக் கடினமான பாறைகள் இருப்பதால் பணி தாமதமாக நடைபெறுகிறது. இதனால் ஒப்பந்ததாரிடமிருந்து கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதனால் பணியின் காலத்தை நீட்டிப்பதற்காக ஆணையத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com