காரைக்குடியில் கீழ ஊருணி சீரமைப்புப் பணிகள் நிறைவு
By DIN | Published On : 04th March 2019 07:40 AM | Last Updated : 04th March 2019 07:40 AM | அ+அ அ- |

காரைக்குடியில் உள்ள கீழ ஊருணியில் நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
காரைக்குடியில் மிகப்பெரிய ஊருணியான கீழ ஊருணி பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருந்தது. இதையடுத்து இதனை சீரமைக்கும் பணி கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் ஆழ்துளை கிணறு, சொட்டுநீர்ப் பாசனப் பூங்கா, நடைபாதை, நந்தவனம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து ஊருணி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் திறந்து வைத்தார். விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்கள், செட்டிநாடு குழுமத் தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கேஆர். ராமசாமி, தொழிலதிபர் எம்.எஸ்.ஆர்எம். எம். ராமசாமி ஆகியோர் பேசினர். ஊருணி சீரமைப்புக் குழுவினர் மற்றும் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
விழாவில் மதுரை தொழிலதிபர் ஹரி தியாகராஜன், சுழற்சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ். பெரியணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக அரசு சிறப்பு வழக்குரைஞர் வி.ஆர். சண்முகநாதன் வரவேற்றார். முடிவில் கீழஊருணி சீரமைப்புக் குழுச் செயலாளர் எஸ்.எல்.என்.எஸ். நாராயணன் நன்றி கூறினார்.