தேர்தலில் அரசு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டால் துறை ரீதியான நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை தலைமைத் தேர்தல் அதிகாரி வி.கந்தவேலு எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால், மாதிரி நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரத் தட்டிகள், பேனர்கள் அகற்றப்படுகின்றன.
அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் நலத் திட்டங்கள் அறிவிப்பதற்கு முன்பு, மாதிரி நன்னடத்தை நெறியின் பகுதி 8-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியலில் பங்கு பெறக்கூடாது என அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறி செயல்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை மட்டுமன்றி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-இன்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பணியில் 5 ஆயிரம் அலுவலர்களும், காவல் துறையைச் சேர்ந்த 3,718 அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்சாரம், தனிக் கழிப்பறைகள், குடிநீர், சாய்வு பாதை, அணுகுச் சாலைகள், நிழலிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்படும்.
ராணுவத்தில் பணியாற்றுவோர் மின்னணு முறையில் வாக்களிப்பர். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் தேர்தல் பணிச் சான்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விபாட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
வேட்பாளர்கள் அதிக தேர்தல் செலவு செய்யும் மாநிலங்களில் புதுவை யூனியன் பிரதேசமும் ஒன்றாகும். பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படும். இது தவிர விடியோ பார்வைக் குழு, கணக்குக் குழு ஆகியவையும் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படும்.
தேர்தல் விளம்பரங்களுக்கு முன்சான்று அளிக்க மாநில அளவிலான, மாவட்ட அளவிலான ஊடகச் சான்று, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்படும். இந்தக் குழு கட்டணச் செய்திகளையும் கண்காணிக்கும்.
தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என்றார் கந்தவேலு.
=