அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி மையங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் அடிப்படை வசதிகளின்றி உள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்து களப்பணி அலுவலர்கள் ஆய்வு செய்து


சிவகங்கை மாவட்டத்தில் அடிப்படை வசதிகளின்றி உள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்து களப்பணி அலுவலர்கள் ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது: 
மக்களவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குச் சாவடி அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வழங்கிய மனுவை ஆய்வு செய்து சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலிருந்து இறந்தவர்கள் 900 பேரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் படைத்த வாக்காளர்களுக்கு தேர்தல் நேரத்தில் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர விண்ணப்பித்தவர்களை அந்தந்த பகுதி வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
தற்போது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி பெருக்கி பயன்படுத்த தடை உள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருவிழா நடைபெறுவதால் கோயில் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலம் ஒலி பெருக்கி மற்றும் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நீண்ட தூரம் நடந்து சென்று வாக்களிக்கும் நிலை உள்ள வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து அதனை மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மேற்கூரைகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச் சாவடி மையங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
மேலும் அடிப்படை வசதிகளின்றி உள்ள வாக்குச்சாவடி மையங்கள் குறித்து அந்தந்தப் பகுதி  களப்பணி அலுவலர்கள் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com