மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு: மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான முதல்கட்


மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இப்பயிற்சியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: 
மக்களவை பொதுத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய வாக்காளர் பட்டியல் சென்று சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். 
அதேபோல தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை கள ஆய்வு செய்து அனைத்து மையங்களிலும் சாய்வுதள வசதி, மின்சாரம், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
 அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கக் கூடிய இயந்திரங்கள் ஆகியவற்றை கையாளும் முறை குறித்து பயிற்சிகள் வழங்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான படிவங்கள், தளவாட பொருள்கள், கட்டு உரைகள், அழியா மை உள்ளிட்ட அனைத்து பொருள்களின் இருப்பினை உறுதி 
செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு முறையே பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
வாக்குப்பதிவு நேரம் தொடங்குவதற்கு முன் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்திறனை உறுதி செய்வதற்கான மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதோடு மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் நீக்கி உறுதி செய்த பின்னரே தேர்தல் வாக்குப்பதிவினை தொடங்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் மிகவும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார். 
 இப்பயிற்சியில் கூடுதல் தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான சி.முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் எம்.மதியழகன் (மாவட்ட வழங்கல் அலுவலர், திருவாடானை தொகுதி), க.கயல்விழி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், முதுகுளத்தூர்), மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பு அலுவலரும், உதவி ஆணையருமான (கலால்) சி.ரவிச்சந்திரன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயிற்சிக்கான பொறுப்பு அலுவலரும், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலருமான சேக் முகையதீன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com