போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ. 36.50 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில்

திருப்புவனம் அருகே லாடனேந்தலில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் 19 பேரின் பெயரில் போலி நகைகளைஅடகு வைத்து ரூ.36 லட்சத்து 52 ஆயிரம் மோசடி செய்த அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.  
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தலில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்களிடமிருந்து அடகு பிடிக்கப்பட்ட நகைகள் அண்மையில் பரிசோதனை செய்யப்பட்டதாம். இதில் கடந்த 18-8-2016 முதல் 9-1-12018 வரை உள்ள காலத்தில் 19 வாடிக்கையாளர்கள் பெயரில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் போலியானவை என தெரியவந்தது.
இதுபற்றி மேலும் விசாரித்ததில் அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய லாடனேந்தலைச் சேர்ந்த செந்தில்குமார் (47) என்பவர் மோசடி செய்து போலி நகைகளை வைத்து ரூ.36 லட்சத்து 52 ஆயிரம் பெற்றிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இதுபோன்று ஏதும் தவறு நடக்கக் கூடாது என்பதற்காக அந்த வங்கியின் வேறொரு கிளையில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர் வந்து வங்கியில் உள்ள நகைகளை சோதனை செய்வது வழக்கமாம். 
அதனடிப்படையில் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள அதே வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றும் கதிரேசன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாடனேந்தல் வங்கியில் உள்ள நகைகளை சோதனை செய்தாராம். ஆனால் அவரும் இதுபற்றி ஏதும் வங்கியில் தகவல் தெரிவிக்கவில்லையாம்.   
இதுகுறித்த தகவலறிந்த அந்த வங்கியின் முதுநிலை மேலாளர் பவுன்ராஜ் (60) சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம் அண்மையில் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் நகை மதிப்பீட்டாளர்கள் செந்தில்குமார், கதிரேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில்குமாரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர் கதிரேசனை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com