மாரநாடு ஸ்ரீகருப்பண சுவாமி கோயிலில் களரி உற்சவ விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மாரநாடு கிராமத்தில் ஸ்ரீ கருப்பணசுவாமி கோயில் மாசிக்களரி உற்சவ விழா வெள்ளிக்கிழமை


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மாரநாடு கிராமத்தில் ஸ்ரீ கருப்பணசுவாமி கோயில் மாசிக்களரி உற்சவ விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.  
கருப்பண சுவாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பக்தர்கள் பொங்கல் வைத்து பீட பூஜை நடத்தினர். இக்கோயிலில் மலர் மாலைகளை காணிக்கையாக செலுத்தி வேண்டுதல் செய்வது சிறப்பு என்பதால் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப மாலைகளை வாங்கி சுவாமிக்கு அணிவித்து காணிக்கை செலுத்தினர். கோயிலுக்கு வெளியே நீண்டவரிசையில் நின்று வந்து பக்தர்கள் கருப்பண சுவாமியை தரிசனம் செய்தனர். கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த களரிப் பொட்டலில் நள்ளிரவு சாமியாட்டம் தொடங்கியது.  அதன்பின் சாமியாடிகள் நடப்பாண்டுக்கான பலன்கள் குறித்து அருள்வாக்கு கூறினர். கோயிலுக்கு வெளியே 20 அடி உயரத்தில் களரிப் பொட்டலில் அமைக்கப்பட்டிருந்த கல்தூணில் கருப்பண சுவாமிக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய மாலைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த மாலைகளை  எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து வழிபட்டால் மங்களம் உண்டாகும் என நம்புவதால் சனிக்கிழமை அதிகாலையில் சாமியாட்டம் முடிந்ததும் அந்த மாலைகளை அங்கிருந்த பக்தர்கள் போட்டிபோட்டு வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
பக்தர்கள் வசதிக்காக மதுரை, மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய இடங்களிலிருந்து மாரநாட்டுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com