வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்டம்
By DIN | Published On : 24th March 2019 12:38 AM | Last Updated : 24th March 2019 12:38 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்15) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தினசரி காலை, மாலை வேளைகளில் சிம்மம், காளை, குதிரை, காமதேனு, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. விஷேச அலங்காரத்துக்கு பின்னர், அம்மன் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, தேரடியிலிருந்து காலை 8.10 மணிக்கு தேர் புறப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த பின்னர் 8.50 மணிக்கு நிலைக்கு வந்தது. பூப்பல்லக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுகிறது. திங்கள்கிழமை உற்சவ சாந்தி உள்ளிட்ட வைபவங்களுடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது.கொல்லங்குடி, சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.