திருப்பத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் தேர் பவனி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு,  வெள்ளிக்கிழமை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு,  வெள்ளிக்கிழமை இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தேரில் பவனி வந்தார். 
      இக்கோயிலில் வசந்த பெருவிழா பத்து நாள்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு பூமாயி அம்மனுக்கு கொடியேற்றி காப்புக் கட்டப்பட்டு முதல் நாள் விழா தொடங்கியது. விழா நாள்களில் 2 ஆம் நாள் முதல் 8 ஆம் நாள் வரை தினமும் இரவு அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
      ஆறாம் நாளில் பக்தர்கள் பூமாயி அம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபட்டனர். 9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, மேள தாளங்களுடனும், வாண வேடிக்கைகளுடனும் ஆறுமுகம் பிள்ளை தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, பேருந்து நிலையம், வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி வழியாக வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தார். 
     இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் 10 ஆம் நாளான சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி  நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் கோயில் திருக்குளத்தில் தெப்பம் நடைபெறுகிறது. மேலும், திருக்குளத்தைச் சுற்றி விளக்கேற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர், இரவு 9 மணியளவில் காப்பு களைந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com