மழை பெய்து வேளாண் பணி சிறக்க வேண்டி சிவகங்கை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபட்ட திருவிழா
By DIN | Published On : 05th May 2019 01:24 AM | Last Updated : 05th May 2019 01:24 AM | அ+அ அ- |

சிவகங்கை அருகே திருமலையில் உள்ள மடைக் கருப்பண சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மழை பெய்து, வேளாண் பணிகள் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபட்டனர்.
சிவகங்கை அருகே உள்ள திருமலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மலைக் கொழுந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே உள்ள மடைக் கருப்பண சுவாமியை தான் இந்த பகுதி மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இதையடுத்து கண்மாயில் உள்ள அனைத்து மடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் மடைக் கருப்பண சுவாமி உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய விழாவான நேர்த்திக்கடன் செலுத்தும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு திருமலையைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் அரிவாள், மணி, காளைகள் மற்றும் ஆடுகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மடைக் கருப்பண சுவாமி கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, மலை கொழுந்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்த நீரினை பயன்படுத்தி மண் பானையில் பொங்கல் வைத்தனர். அதன்பின்,மடைக் கருப்பண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயில் முன்பு உள்ள பலி பீடத்தில் 320 ஆடுகளை வரிசையாக நிறுத்தி பலியிட்டனர்.
உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி செழிக்க வேண்டியும் சமைக்கப்பட்ட பச்சரிசி சாதத்தோடு, பொங்கல், சமைத்த ஆட்டிறைச்சியுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து நள்ளிரவு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விழாவில் பங்கேற்ற திருமலையைச் சேர்ந்த ஆண்கள் கூறியது : சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் எங்களது கிராமத்தில் வாழ்ந்த முன்னோர்கள் தொடங்கி வைத்த இந்த விழாவினை தற்போது வரை தொடர்ந்து பின்பற்றி வழிபட்டு வருகிறோம்.
இதன் மூலம்,மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்றும்,நாள் பட்ட நோய்கள் தீரும் என்றும்,திருமணத் தடை நீங்கும் என்றும் இந்த பகுதி மக்களிடையே நம்பிக்கை உள்ளது என்றனர்.