காற்று, மழையால் வாழைகள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா?

சிவகங்கை மாவட்டத்தில் அண்மையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகைக் கிடைக்குமா


சிவகங்கை மாவட்டத்தில் அண்மையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகைக் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டு ஏறத்தாழ 1,006 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் சுமார் 3,000 ஆயிரம் ஹெக்டேர்  பரப்பளவில் வாழை சாகுபடி நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
ஆனால் வறட்சி, உற்பத்தி செலவு மற்றும் இடுபொருள்களின் விலை உயர்வு, நிலத்தடி நீர் மட்டம் சரிவு, விலை வீழ்ச்சி உள்ளிட்ட வை வாழை சாகுபடியை வெகுவாக பாதித்துள்ளன. இப்பகுதிகளில் நாடு, ஒட்டு, பூவன் ரக வாழைகள் அதிகம் விளைகின்றன. 
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சிவகங்கை, தேவன்கோட்டை, மலம்பட்டி, இடையமேலூர், சாலூர், அரசனூர், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், கானூர், கிளாதரி, பூவந்தி, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து முற்றிலும் சேதமடைந்தன.
இவற்றின் விவரங்கள் குறித்து தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தகவல் சேகரித்து வந்தனர். எனவே, இவற்றிற்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை கிடைக்குமா என விவசாயிகள் எதிர் நோக்கியுள்ளனர். 
இதுகுறித்து மழவராயனேந்தலைச் சேர்ந்த விவசாயி அழகேசன் கூறியது : ஒரு ஏக்கரில் ஆயிரம் வாழைக் கன்றுகளை நடவு செய்ய முடியும். தற்போது வேலையாள் கூலி, போக்குவரத்துச் செலவு, பூச்சிக் கொல்லி மருந்து, உரம் ஆகியவற்றின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனால் ஒரு வாழைக்கு ரூ.120 வரை செலவாகும். 
தோராயமாக, ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்ததில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளன.  தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கினால் மட்டுமே நஷ்டத்திலிருந்து ஓரளவுக்கு மீள முடியும் என்றார்.
இதுபற்றி தோட்டக்கலைத் துறை அலுவலர் ஒருவர் கூறியது:  
சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 3 வட்டாரங்களில் வாழை மரங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன. இது குறித்த புள்ளி விவரங்களுடன் இழப்பீடு தொகைக் கோரி மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுதவிர,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடனுதவி பெற்ற விவசாயிகள் சிலர் வாழைக்கு காப்பீடு செய்துள்ளனர். அதுபற்றிய விவரங்களும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com