முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மானாமதுரை அருகே 40 ஆண்டுகளுக்கு பின் 7 ஊருணிகள் மீட்பு
By DIN | Published On : 15th May 2019 07:38 AM | Last Updated : 15th May 2019 07:38 AM | அ+அ அ- |

மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் கிராமத்தில் ஆக்கிரமிப்புக்குள்ளாகி மாயமான 7 ஊருணிகள், 40 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டு செவ்வாய்க்கிழமை தூர்வாரப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தஞ்சாக்கூர் கிராமத்தில் கண்ணத்தாள் ஊருணி, தோப்புகார ஊருணி, ராணி, வண்ணான், அரசரடி, பட்டூரணி, நத்தம் கணக்கர், சுப்பிரமணியம், அய்யனார் ஆகிய 9 ஊருணிகள் உள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன், இந்த ஊருணி தண்ணீரை கிராம மக்கள் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில், சிலர் ஊருணிகளையும், வரத்துக் கால்வாய்களையும் சிலர் ஆக்கிரமித்தனர்.
இதனால், ஊருணிகள் மண் மேவி, சீமைக் கருவேல மரங்கள் முளைத்து, சுவடு தெரியாமல் மறைந்தன. சில ஊருணிகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி விவசாயம் செய்யப்பட்டு வந்தது. 9 ஊருணிகளில் சுப்பிரமணியம், அய்யனார் ஊருணிகளை தவிர, 7 ஊருணிகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகின.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் கே.ஏ. பாலசுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊருணிகளை சீரமைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நகலை காண்பித்து, ஊருணிகளை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதன்பேரில், ஊருணிகளை மீட்டு தூர்வார ஆட்சியர் உத்தரவிட்டார். அதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட ஊருணிகளில் நிள அளவீடு செய்யும் பணி நிலஅளவைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் 9 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஊருணிகளை மீட்கும் பணி தொடங்கியது.
முதல் கட்டமாக, கண்ணத்தாள், ராணி, தோப்புக்கார ஊருணிகளை மீட்டு தூர்வாரும் பணி நடைபெற்றது.
இது குறித்து ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் கூறியது: ஆக்கிரமிப்பில் உள்ள 7 ஊருணிகளும் 15 நாள்களில் மீட்கப்படும் என்றார்.