தென்கரையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 11 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 15th May 2019 07:37 AM | Last Updated : 15th May 2019 07:37 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள தென்கரை அந்தரநாச்சியம்மன் கோயில் பூத்திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இக் கோயில் பூத்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த மஞ்சுவிரட்டில், தென்கரை, சிராவயல், கிளாமடம், ஊர்குளத்தான்பட்டி, வயிரவன்பட்டி, திருப்பத்தூர், குன்றக்குடி, வலையபட்டி, மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், ஏராளமான மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.
இதில், தொழுவிலிருந்து 50 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. மற்ற மாடுகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.
ஆனால், இந்த மஞ்சுவிரட்டுக்கு அனுமதி பெறாததால், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அப்பகுதியைச் சேர்ந்த சின்னையா, அப்துல்கலாம், சுப்பிரமணியன், முருகவேல், குமார் ஆகியோர் மீது மஞ்சுவிரட்டு நடத்தியதாகவும் மற்றும் தென்கரையைச் சேர்ந்த நாச்சியப்பன், கிளாமடத்தைச் சேர்ந்த சண்முகம், விசு, வசந்த், கும்மங்குடிப்பட்டியைச் சேர்ந்த வள்ளியப்பன், அழகாபுரியைச் சேர்ந்த கிட்டு ஆகியோர் மீது அனுமதியின்றி மாடு அவிழ்த்து விட்டதாகவும், நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர்.