தேவகோட்டையில் லாரியில் தீ
By DIN | Published On : 16th May 2019 07:07 AM | Last Updated : 16th May 2019 07:07 AM | அ+அ அ- |

தேவகோட்டையில் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரியில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சாலையின் மையப்பகுதி மற்றும் சாலைகளில் இரு பக்கங்களிலும் வெள்ளைக் கோடு அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினர் காரைக்குடி அருகிலுள்ள அமராதிபுதூரில் தங்கி அப்பணிகளை செய்துவருகின்றனர்.
இளையாங்குடி அருகிலுள்ள சாலை கிராமத்தில் அப்பணியைச் செய்வதற்காக புதன்கிழமை கடலூர் மாவட்டம் ஒரத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் கவியரசன் (23) என்பவர் லாரியை ஓட்டிக்கொண்டு அமராவதிபுதூரிலிருந்து 7 பணியாளர்களுடன் தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் சென்றார்.
தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுலகம் அருகே சென்ற போது லாரியில் தீப்பற்றியது. அதில் எடுத்துச் சென்ற வேதிப்பொருள்கள் வெயிலின் தாக்கத்தால் தீப்பற்றியது தெரியவந்தது. ஓட்டுநரும், பணியாளர்களும் கீழே குதித்துதப்பித்தனர். உடனடியாக தேவகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அதிகாரி நாகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்தை நிறுத்திவைத்தனர். நகர் போலீஸார் வாகனத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.