காரைக்குடி அழகப்பா பல்கலை. தேர்வுப்பிரிவில் புதிய "டிஜிட்டல்' மதிப்பீட்டு முறை அறிமுகம்
By DIN | Published On : 18th May 2019 07:55 AM | Last Updated : 18th May 2019 07:55 AM | அ+அ அ- |

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தேர்வுப் பிரிவில் புதிய இயங்கு திரைவழி (டிஜிட்டல்) மதிப்பீட்டு முறையை துணைவேந்தர் நா. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் "ரூசா 2.0' நிதியுதவி திட்டத்தின் கீழ் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் தரம் மேம்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் அழகப்பா பல்கலை. தேர்வுப் பிரிவில் இயங்கு திரைவழி மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் உள்ள கணினி ஆய்வக அறையில் தொடங்கி வைத்து துணைவேந்தர் பேசியது: இப்புதிய மதிப்பீட்டு முறை எந்தவித தவறும் நிகழ இயலாத மதிப்பீட்டு முறையாகும். 2019 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றுள்ள தேர்வுகளுக்கு இயங்கு திரைவழி மதிப்பீட்டு முறையை இப்பல்கலைக்கழக முதுநிலை படிப்புகள் மற்றும் இணைப்புக்கல்லூரி படிப்புகள் ஆகியவற்றிற்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த இயங்கு திரைவழி மதிப்பீடு ஓர் எளிமையான பிழைகளற்ற முறை. ஒவ்வொரு செயலும் பதிவு செய்யப்படும். விடைத்தாளில் யாரும் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. மதிப்பெண் கூட்டலில் தவறு, விடைக்குரிய மதிப்பெண் இடுவதில் விடுபடுதல் ஆகியவற்றிற்கு வாய்ப்புகள் இல்லை. விடைத்தாளில் ஒரு பக்கத்தை முழுமையாக மதிப்பீடு செய்த பிறகே இயங்கு திரையில் அடுத்த பக்கம் வரும். இப்புதிய முறையை செயல்படுத்துவதால் அழகப்பா பல்கலைக்கழகம் தேர்வு மேலாண்மையில் முழுமையாகத் தன்னிறைவு அடைகிறது. இதனால் தேர்வுச் செயல்பாடுகளில் வேகம், நம்பகத்தன்மை, செயல்திறன், துல்லியத்தன்மை ஆகியவற்றில் இப்பல்கலைக்கழகம் மேலும் வளர்ச்சிபெறும் என்றார்.
நிகழ்ச்சியில் பல்கலை. பதிவாளர் ஹா. குருமல்லேஷ் பிரபு, நிதி அலுவலர் வி. பாலச்சந்திரன், தேர்வாணையர் கா. உதயசூரியன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜெ. ஜெயகாந்தன், த.ரா. குருமூர்த்தி, ஆர். சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர்கள், தேர்வுப்பிரிவு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.