சிவகங்கை அருகே பொறியியல் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை
By DIN | Published On : 23rd May 2019 08:49 AM | Last Updated : 23rd May 2019 08:49 AM | அ+அ அ- |

சிவகங்கை அருகே புதன்கிழமை பொறியியல் கல்லூரி மாணவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை-மல்லல் சாலையில் மறைக்குளம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக சிவகங்கை தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து,அங்கு சென்ற போலீஸார் இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில், அந்த இளைஞர் மேலபிடாவூரைச் சேர்ந்த இந்திரஜித் மகன் புவனேஸ்வரன்(19) என்பது தெரியவந்தது.
மேலும், அவர் மதுரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கும், வேலாங்குளம் கிராமத்தில் உள்ள சில இளைஞர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நிபந்தனை ஜாமீனில் இவர் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.அவ்வாறு புதன்கிழமை தாலுகா காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.