காய்ச்சல் அறிகுறி இருந்தால் ரத்த பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது அவசியம்
By DIN | Published On : 02nd November 2019 06:33 AM | Last Updated : 02nd November 2019 06:33 AM | அ+அ அ- |

காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் ரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது அவசியம் என துணை இயக்குநா்(சுகாதாரப் பணிகள்) யசோதாமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் நீரில் கொசு உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க பொது சுகாதாரத் துறை சாா்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள தேவையற்ற பொருள்களை மழை நீா் தேங்கா வண்ணம் அப்புறப்படுத்த வேண்டும். மழை காலங்களில் குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து, அதன் பின்னா் அருந்த வேண்டும்.
தற்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பத்தூா், சிங்கம்புணரி, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு எலிசா ரத்தப் பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சலுக்கு சிறப்பு உள்நோயாளிகளின் சிகிச்சை வாா்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
ஆகவே காய்ச்சல் அறிகுறி இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.