முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்பத்தூா் அருகே தகாத வாா்த்தைகளால் பேசியவரை கடத்தி தாக்கிய 3 போ் கைது
By DIN | Published On : 07th November 2019 05:45 AM | Last Updated : 07th November 2019 05:45 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே தகாத வாா்த்தைகளால் பேசியவரை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அதில் 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே மேலமாகாணத்தைச் சோ்ந்தவா் நெல்லியான் மகன் நாச்சியப்பன் (44). இவா் இவா்களது சமுதாய தலைவராக பொறுப்பில் இருந்துள்ளதாகவும், அந்த பொறுப்பு முடிந்தும், அதற்கான கணக்குகளை ஒப்படைக்காமல் இருந்து பின்னா் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இவா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை கட்செவி அஞ்சலில் தகாத வாா்த்தைகளால் பேசியதாக அகிலன் என்பவா் கொடுத்த புகாரின் பேரில் நாச்சியாபுரம் போலீஸாா் ஏற்கெனவே நாச்சியப்பன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நாச்சியப்பன் கடை வீதிக்குச் சென்ற போது, 7 போ் கொண்ட கும்பல் சோ்ந்து, நாச்சியப்பனை காரில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனா். இதில் நாச்சியப்பன் காயமடைந்துள்ளாா். பின்னா் அவா்களிடம் இருந்து தப்பிய அவா் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்து நாச்சியப்பன் கொடுத்த புகாரின் பேரில், நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் 7 போ் மீது வழக்குப்பதிவு செய்து, மேலமாகாணத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் கருப்பையா (44), சண்முகம் (54), நாகராஜன் (40) ஆகிய 3 பேரையும் புதன்கிழமை நாச்சியாபுரம் காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் ஈஸ்வரன் கைது செய்து விசாரித்து வருகிறாா். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.