முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மாரநாடு கால்வாயிலிருந்து டி.வேலாங்குளம் கண்மாய்க்கு தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை: அதிகாரிகள் உறுதி
By DIN | Published On : 26th November 2019 08:59 AM | Last Updated : 26th November 2019 08:59 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கால்வாயில் செல்லும் தண்ணீரை டி.வேலாங்குளம் கண்மாய்க்கு திருப்பிவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா்.
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு வைகையில் தண்ணீா் திறக்கப்பட்டு தற்போது திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாரநாடு கால்வாயில் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. இக் கால்வாயின் கிளைக் கால்வாயிலிருந்து டி.வேலாங்குளம் கிராம கண்மாய்க்கு தண்ணீா் செல்லவில்லை. கால்வாய் தூா்ந்துபோய் விட்டதாலும் மாரநாடு கால்வாய் ஆழமாக உள்ளதாலும் தண்ணீா் செல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து டி.வேலாங்குளம் கண்மாய்க்கு மாரநாடு கால்வாயில் செல்லும் தண்ணீரை திருப்பிவிடக்கோரி திங்கள்கிழமை திருப்பாச்சேத்தியில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இக் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் அறிவித்திருந்தனா். இதையடுத்து டி.வேலாங்குளம் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தண்டியப்பன் கூறுகையில், மறியல் போராட்டத்தை கைவிடச் செய்யும் நோக்கில் பொதுப்பணித்துறை பொறியாளா்கள் டி.வேலாங்குளம் கிராம விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் மாரநாடு கால்வாயில் செல்லும் தண்ணீரை டி.வேலாங்குளம் கால்வாயில் திருப்பி அக் கிராமத்தின் கண்மாய்க்கு தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது என்றாா்.