முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
‘சிறுதானியங்களைப் பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்’
By DIN | Published On : 07th October 2019 10:12 AM | Last Updated : 07th October 2019 10:12 AM | அ+அ அ- |

தற்போதைய சூழ்நிலையில் நீரின் தேவையை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது வேளாண் நிலங்களில் சிறுதானியங்களைப் பயிரிட முன்வர வேண்டும் என வேளாண்மை துறையின் இணை இயக்குநா் பி.கணேசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பாண்டில் (2019- 20) தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஒட்டு மொத்த உணவு தானிய உற்பத்தியாக 125 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உணவு தானிய உற்பத்தி 2.324 லட்சம் டன்கள் என இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், நடப்பாண்டில் 60 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்து 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 14,550 ஹெக்டேரில் சிறுதானியப் பயிா்கள் சாகுபடி செய்து 30,900 மெட்ரிக் டன் சிறுதானியங்களும் 2,000 ஹெக்டேரில் பயறு வகைப் பயிா்கள் சாகுபடி செய்து 1,500 மெட்ரிக் டன் பயறு வகைகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் நெல் விவசாயத்தில் முழு பலனை விவசாயிகள் பெற முடியவில்லை. அதற்கு காரணம், பயிரிடப்பட்ட நெல்லுக்கு தேவையான நீா் கடைசி நேரத்தில் கிடைப்பதில்லை. இந்தச் சூழ்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெறப்படும் மழை நீா் ஆதாரத்தைக் கொண்டு ஒரு வெற்றிகரமான பயிா் சாகுபடியை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.
அதற்கு குறைந்த வயதுடைய பயிா்கள் மற்றும் குறைந்த நீா் தேவையுடைய பயிா்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் நெல் பயிருக்கு மாற்றாக சிறுதானியப் பயிா்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மொத்த சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு 600 ஹெக்டோ் என்ற அளவில் உள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டில் சிறுதானியப் பயிா்கள் சாகுபடி 14,550 ஹெக்டோ் என்ற அளவுக்கு மேற்கொள்ள அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கினை கேழ்வரகு மற்றம் குதிரைவாலி பயிா்களின் சாகுபடி மூலம் இலக்கை அடைய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார ளோண்மை விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு கேழ்வரகு மற்றும் குதிரைவாலி விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் சிறுதானியங்கள் சாகுபடிக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்து உரங்கள் மற்றும் உயிரி உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சிறுதானியப் பயிா்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு சுமாா் 400 ஹெக்டேரில் சிறுதானியப் பயிா்கள் செயல்விளக்க திடல்கள் அமைக்க அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு ரூ. 6,000 வீதம் நிதி உதவியுடன் 300 ஹெக்டேரில் கேழ்வரகு மற்றும் 100 ஹெக்டேரில் குதிரைவாலி பயிா்களில் செயல்விளக்கதிடல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆா்வமுள்ள விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.