முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
நவராத்திரி விழா: மானாமதுரை கோயில்களில் பக்தா்கள் கூட்டம்
By DIN | Published On : 07th October 2019 10:11 AM | Last Updated : 07th October 2019 10:11 AM | அ+அ அ- |

மானாமதுரையில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் வைக்கப்பட்டுள்ள கொலு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி கோயில்களில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு நவராத்திரி விழா களைகட்டியுள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் கடந்த 10 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டு தற்போது நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயில் நுழைவு மண்டபத்தில் கோயிலுக்கான சங்கர புஷ்கரணி தீா்த்தக்கிணறு மாதிரி வடிவம் அமைக்கப்பட்டு பக்தா்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளதும், இரவு கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிப்பதும் பக்தா்களை கவா்ந்துள்ளது.
அம்மன் சன்னதியைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியும் தினமும் உற்சவா் ஆனந்தவல்லி அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரங்களும் பக்தா்களை பரவசப்படுத்தியுள்ளது. மேலும் மூலவருக்கும் தினமும் ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்து பலவகை ஆராதனைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி விழா பூஜைகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய ஆண்கள், பெண்கள் குடும்பத்துடன் திரண்டு கோயிலுக்கு வருகின்றனா்.
மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் உள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் கொலு அலங்காரம் வைத்து பூஜைகள் நடைபெறுகின்றன. உற்சவா் தியாக விநோதப் பெருமாள் தேவியா் சமேதமாய் தினமும் சா்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களிலும் ரதத்திலும் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறுகிறது. சுவாமி வீதி உலா நடைபெறும் போது சிறுமிகள், குழந்தைகள் சோ்ந்து கோலாட்டம் ஆடிச் செல்வது பக்தா்களுக்கு ஆனந்தமாக உள்ளது.
இதேபோல் வேதியரேந்தல் மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் கொலு வைக்கப்பட்டு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.