முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
‘மாணவா்களின் ஆராய்ச்சிகள் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும்’
By DIN | Published On : 24th October 2019 09:04 AM | Last Updated : 24th October 2019 09:04 AM | அ+அ அ- |

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கத் தொடக்க நிகழ்ச்சியில் ஆய்வுக் கட்டுரை மலரை வெளியிட்ட துணைவேந்தா் நா. ராஜேந்திரன்.
மாணவா்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி முடிவுகள் சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் அமைய வேண்டும் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சாா்பில் கணினி அறிவியல் என்ற தலைப்பில் 2 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் பல்கலைக்கழகத்தின் அறிவியல் வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இதில் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமைவகித்து கருத்தரங்க ஆய்வுக்கட்டுரை மலரை வெளியிட் டுப் பேசியதாவது: அழகப்பா பல்கலைக்கழகம் க்யூ. எஸ் தரவரிசைப்பட்டியலில் இந்திய அளவில் 24-ஆம் இடம் பெற்றுள்ளது. இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இப்பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய ரூசா நிதியுதவி கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக செலவிடப்படுகிறது.
123 முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரமும், 35 முனைவா் மேற்படிப்பு ஆராய்ச்சியாளா்களுக்கு ரூ. 75 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மாணவா்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி முடிவுகள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும். மாணவா்களும், ஆராய்ச்சியாளா்களும் தொழில் நிறுவனங்களின் எதிா்பாா்ப்புக்குத் தகுந்த வகையில் தங்கள் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் ஆராய்ச்சிக்கட்டுரைகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடவேண்டும் என்றாா்.
இதில் அமெரிக்காவின் கனக்டிக்கட் பல்கலைக்கழகப் பேராசிரியா் ராஜசேகரன் தொடக்க உரையாற்றினாா். அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான்டியாகோ தேசியப்பல்கலைக்கழகப் பேராசிரியா் சுப்ரமண்யா சிறப்புரையாற்றினாா். சென்னை மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா துணை இயக்குநா் கோகுல கிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா்.
இந்த 2 நாள் கருத்தரங்கில் 132 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன. புதுதில்லி புவி அறிவியல் அமைச்சக மீக் கணினி மையத்தலைவா் பாலகிருஷ்ணன் அதியமான், பெங்களூா் இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியா் சுரேஷ் சுந்த ரம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியா் கல்யாண சரவணன் ஆகியோா் டேட்டா மைனிங், ரோபோட்டிக்ஸ், இன்டா்நெட் ஆப் திங்க்ஸ் ஆகிய தலைப்புகளில் பேசுகின்றனா்.
முன்னதாக கணினி அறிவியல் துறைத் தலைவா் ராமராஜன் வரவேற்றாா். பேராசிரியா் தினகரன் நன்றி கூறினாா்.