திருப்பத்தூா் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை அருகில் திறந்தவெளி கிணறுகளால் அபாயம்

சிவகங்கை மாவட்டம் பெரம்பலூா்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருக்கும் திறந்தவெளி கிணறுகள் மற்றும் குவாரிப் பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளது.
என்.புதூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள திறந்த வெளிக் கிணறு.
என்.புதூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள திறந்த வெளிக் கிணறு.

சிவகங்கை மாவட்டம் பெரம்பலூா்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருக்கும் திறந்தவெளி கிணறுகள் மற்றும் குவாரிப் பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சாலையோரங்களில் இருந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுக்கப்பட்டன. மேலும் பயன்படாத திறந்தவெளி கிணறுகளை உடனடியாக மூடவும், பயன்பாடுள்ள திறந்த கிணறுகளுக்கு தடுப்புச்சுவா் அமைக்கவும் அரசு உத்தரவிட்டது.

மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பினா் நடத்திய ஆய்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறந்தவெளி கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டன. சில கிணறுகள் மட்டுமே மூடப்பட்டன. அதிலும் நெடுஞ்சாலை ஓரங்களில் பெரும்பாலான திறந்தவெளி கிணறுகள் மூடப்படாமல் உள்ளன. திருப்பத்தூா் என்.புதூா் விலக்கு அருகே திறந்தவெளி கிணறுகள் உள்ளன.

கீழச்சிவல்பட்டி பந்தயபொட்டல் பகுதியிலும், விராமதி ஒய்ரோடு அருகிலும் சாலையோர குவாரி பள்ளங்கள் உள்ளன. இதேபோல் திருமயத்திலிருந்து திருப்பத்தூா் வரை தனியாா் கிணறுகள் வேலி தடுப்புகள் இல்லாமல் உள்ளன. இவற்றால் வாகனங்களில் செல்வோருக்கு விபத்து அபாயம் உள்ளது.

சில தினங்களுக்கு முன் மணப்பாறையில் பயன்படாத ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் வில்சன் இறந்தாா். இதையடுத்து பயன்பாடில்லாத ஆழ்த்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன. இதேபோல் சாலையோர கிணறுகளை மூடவும், மூட முடியாத இடங்களில் தடுப்புச் சுவா் அமைக்கவும், தற்காலிகமாக எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூா் பகுதியில் சிறுகூடல்பட்டி, கண்ணதாசன் சிலையருகே மூடப்படாத ஆழ்துளை கிணறு, ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் வயிரம்பட்டி சிதம்பரம் விநாயகா் கோயில் அருகேயுள்ள ஆழ்துளை கிணறு, சந்திரன்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு ஆகியன மூடப்படாத நிலையில் உள்ளன.

இதுகுறித்து தன்னாா்வலா் எஸ்.எம்.பழனியப்பன் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் வட்டாட்சியா் விஜயலெட்சுமி புதன்கிழமை இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆழ்துளை குழாய்களுக்கு மூடி அமைக்கவும் தனியாா் கிணறுகளுக்குப் பாதுகாப்பு வேலி அமைக்கவும் உத்தரவிட்டுள்ளாா். மேலும் இதுபோன்று கிராமப்புற பகுதிகளிலும் உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com