காரைக்குடியில் கலையரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: பணிகள் நிறுத்தம்
By DIN | Published On : 01st September 2019 01:54 AM | Last Updated : 01st September 2019 01:54 AM | அ+அ அ- |

காரைக்குடியில் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி முன்பாக அரசு சீரணிக் கலையரங்கம் கட்டப்படுவதற்கு சமூகநலக்கூட்டமைப்பு மற்றும் அனைத்துக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் பணியை நகராட்சி நிர்வாகம் நிறுத்தியுள்ளது.
காரைக்குடி நகராட்சி அலுவலகம், கண்ணதாசன் மணிமண்டபம், நகராட்சி பூங்கா, புதிய பேருந்து நிலையம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் பள்ளி மாணவிகள் 86 பேரும், கல்லூரி மாணவிகள் 50 பேரும் தங்கியுள்ளனர்.
இந்த விடுதி வாயிலையொட்டி முடியரசன் சாலையில் அரசு சீரணி கலையரங்கம் அமைப்பதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.
இதனால் தங்கள் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் என்று மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும் சமூக நலக் கூட்டமைப்பு மற்றும் அனைத்துக்கட்சிகள் சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் நகராட்சி அலுவலகம் முன்பாக சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டினர். இதனையடுத்து அப்பகுதியில் கட்டுமானப்பணியை நகராட்சி நிர்வாகம் நிறுத்தி பொருள்களை அப்புறப்படுத்தியது.