திருப்புவனத்தில் சாலை நடுவே வாரச்சந்தை: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சாலை நடுவே செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெற்றதால்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சாலை நடுவே செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெற்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
திருப்புவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மண்மேவிக்கிடந்த மட்டை ஊருணியில் பேரூராட்சியின் சார்பில் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் மட்டை ஊருணி தூர்வாரப்பட்டது. 
இதனால் அங்கு செயல்பட்டு வந்த வாரச்சந்தை திருப்புவனம் சேதுபதி நகரில் அரசுக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இங்கு சந்தை நடைபெற்றால் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வரும் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கூட்டுக் குடிநீர் திட்டம் பாதிப்படையும் என தொடரப்பட்ட வழக்கில், சேதுபதிநகரில் சந்தை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இந்த உத்தரவை அடுத்து திருப்புவனத்தில் சேதுபதி நகர் வாரச்சந்தை ரத்து செய்யப்படுவதாக பேரூராட்சி நிர்வாகம் அண்மையில் அறிவித்தது. 
இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், திருப்புவனம் சேதுபதி நகரில் மீண்டும் சந்தை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்புவனம் வர்த்தக சங்கம் சார்பில் கடந்த 5 ஆம் தேதி திருப்புவனம் நகர் முழுவதும் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது.
இருப்பினும் இதுவரை இதற்கு உரிய தீர்வு எட்டப்படவில்லை. ஆகவே செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வேறு வழியின்றி திருப்புவனம்-பூவந்தி சாலை நடுவே தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்தனர். 
இதனால் அந்த பகுதி முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் வெளியேற வழியின்றி மிகவும் அவதிக்குள்ளாகினர். இதுதவிர, பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். 
இது குறித்து விவசாயிகள் கூறியது: வாரச்சந்தையை ரத்து செய்திருப்பதால் விவசாயிகள் மற்றுமின்றி வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து திருப்புவனத்தில் வாரச்சந்தையை தொடர்ந்து நடத்துவதற்கு முன் வர வேண்டும் என்றனர்.
பேரூராட்சி அலுவலர் ஒருவர் கூறியது: உயர்நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாரச்சந்தை நடத்தப்படவில்லை. விவசாயிகளும், வியாபாரிகளும் அவரவர் நோக்கத்துடன் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். திருப்புவனம் சேதுபதி நகரில் வாரச்சந்தை நடைபெறுவதால் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இருப்பினும் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரச்சந்தையை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடத்த இயலாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com