Enable Javscript for better performance
சிவகங்கை அருகே இருளப்பசாமியின் ஜீவசமாதி தள்ளிவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை அருகே இருளப்பசாமியின் ஜீவசமாதி தள்ளிவைப்பு

    By DIN  |   Published on : 14th September 2019 06:00 AM  |   அ+அ அ-   |    |  

    சிவகங்கை அருகே வியாழக்கிழமை நள்ளிரவில் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்திருந்த இருளப்பசாமி, அந்நிகழ்வை ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை மாவட்டம், பாசாங்கரையைச் சேர்ந்தவர் இருளப்பன் (77). இவர், சில தினங்களுக்கு முன் செப்டம்பர் 12 ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்தார். 
    அதன்படி, செப்டம்பர் 12 ஆம் தேதி காலை முதல் அவருக்குச் சொந்தமான இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு, ஜீவசமாதிக்கான பூஜைகள் நடைபெற்றன.
    சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வியாழக்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை இருளப்பசாமியை சந்தித்து ஆசி பெற்றனர். 
    ஜீவசமாதி நிகழ்வினை காண்பதற்காக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் உள்பட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பாசாங்கரை கிராமத்தில் தங்கியிருந்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    ஆனால், அறிவித்தபடி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியை கடந்த பின்னரும் இருளப்பசாமி ஜீவசமாதிக்கான நிலையை அடையவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலை மிகவும் நன்றாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
    பின்னர், இறைவனின் அருளால் மற்றொரு நாளில் ஜீவசமாதி அடையப்போவதாக, இருளப்பசாமி தெரிவித்தார். இதனால், அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

    kattana sevai