சிவகங்கை அருகே 27 எருமை மாடுகளை பலியிட்டு திருவிழா கொண்டாட்டம்

சிவகங்கை அருகே 27 எருமை மாடுகளை பலியிட்டு, அதன் ரத்தத்தை குடிக்கும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அருகே 27 எருமை மாடுகளை பலியிட்டு திருவிழா கொண்டாட்டம்


சிவகங்கை அருகே 27 எருமை மாடுகளை பலியிட்டு, அதன் ரத்தத்தை குடிக்கும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அருகே பையூர் பழமலை நகர் உள்ளது. இந்த நகரில் நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கொடூரக் காளி, மதுரை வீரன், மீனாட்சி, முத்துமாரியம்மன் ஆகிய தெய்வங்களை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பழமலை நகரில் உள்ள நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்தோர் மேற்கண்ட தெய்வங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த விழாவில், இறைவனின் அருள் வாக்கு கூறுபவர்கள் (சாமியாடிகள்) எருமை மாடுகளை பலியிட்டு, அதன் ரத்தத்தை குடிப்பது வழக்கமாம். அந்த வகையில், இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இதில், முக்கிய விழாவான எருமை மாடுகளை பலியிட்டு, அதன் ரத்தத்தை குடிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கொடூரக் காளி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, திருவிழா திடலில் அமைக்கப்பட்டுள்ள பலிபீடக் குடிலில் 27 எருமை மாடுகளும், 31 ஆடுகளும் பலியிடப்பட்டன. 
அப்போது, அருள் வாக்கு கூறுபவர்கள் (சாமியாடிகள்) எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்தை குடித்தனர். அதைத் தொடர்ந்து, காளி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இவ்விழாவை காண்பதற்காக சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
இதுகுறித்து பழமலை நகரைச் சேர்ந்த நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த சிலர் கூறியது: எங்கள் முன்னோர்களின் அறிவுறுத்தலின் படி சுமார் 25 தலைமுறைகளுக்கும் மேலாக இந்த வழிபாடு நடைபெற்று வருகிறது. காளி உத்தரவுக்கு பின்னர் காப்புக் கட்டுதல் நிகழ்விலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு மாதம் விரதமிருந்து இவ்வழிபாடு நடத்துவர்.
இவ்விழாவில், பலி கொடுக்கப்படும் எருமை மாடு மற்றும் ஆட்டின் இறைச்சியை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தோர் வசிக்கும் பகுதிகளுக்கு பகிர்ந்து கொடுத்தனுப்புவோம். காளி அசுரனை வதம் செய்யும் போது, தரையில் சிந்தும் அசுரனின் ரத்தம் மீண்டும் உயிர்த்தெழுந்ததால், அந்த ரத்தத்தை கீழே சிந்தவிடாமல் காளி குடித்து விடுவதாக புராணம் கூறுகிறது.
அந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இவ்விழாவில் எருமை மாட்டை அசுரனாக பாவித்து பலியிட்டு வருகிறோம். மேலும், காளி அருள் வாக்கு கூறும் சாமியாடிகள் அசுரனின் ரத்தம் கீழே சிந்தக் கூடாது என்கிற அடிப்படையில் அதை குடிக்கின்றனர் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com