திருப்புவனம் அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை : இளைஞர் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞரை போலீஸார்


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
 திருப்புவனம் தேரடி வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் அஜித்குமார்(19). இவர் திருச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், விடுதியில் தங்கி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். 
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அஜித்குமார் மீண்டும் பாலிடெக்னிக் செல்லவில்லை. 
இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற  அஜித்குமார் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
 பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது தந்தை சுப்பிரமணி திருப்புவனம் காவல் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி அஜித்குமாரை காணவில்லை என புகார் செய்தார். 
இந்த புகாரின் பேரில் ஆய்வாளர் செந்தில்குமார், சார்பு -ஆய்வாளர்கள் மாரிக்கண்ணன், பாலமுருகன் மற்றும் போலீஸாரைக் கொண்ட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அஜித்குமாரை தேடி வந்தனர். 
இதற்கிடையில் அவர் காணாமல்போன சம்பவம் தொடர்பாக திருப்புவனம் அருகே பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த திவாகர் என்பவரை வெள்ளிக்கிழமை இரவு தனிப்படைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில், அஜித்குமாரை பலர் சேர்ந்து வெட்டுக் கத்தியால் குத்தியும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்து விட்டு, சடலத்தை திருப்புவனம் வைகையாற்றின் நடுப்பகுதியில் புதைத்து விட்டதாக திவாகர் தெரிவித்தார். 
இதையடுத்து திவாகரை போலீஸார் வைகையாற்றுக்கு கூட்டிச் சென்றனர். அங்கு அஜித்குமார் புதைக்கப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காண்பித்தார். அõதைத் தொடர்ந்து சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பயிற்சி டி.எஸ்.பி கவினா, வட்டாட்சியர் ராஜா ஆகியோர் மேற்பார்வையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அதே இடத்தில் சடலத்தை பரிசோதனை செய்து, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். 
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருப்புவனம் அருகே கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முனியான்டி என்பவர் ராமேசுவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அப்போது சிறுவனாக இருந்த அஜித்குமாருக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு பழிக்குப் பழியாக அஜித்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
அஜித்குமார் கொலை தொடர்பாக திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து இதில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com