சிவகங்கையில் இன்று புத்தகக் கண்காட்சி தொடக்கம்

சிவகங்கையில் புத்தகக் கண்காட்சி  புதன்கிழமை (செப்.25)  தொடங்க உள்ளதாக மக்கள் வாசிப்பு இயக்கத்தின் நிறுவனர் வீரபாலன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் புத்தகக் கண்காட்சி  புதன்கிழமை (செப்.25)  தொடங்க உள்ளதாக மக்கள் வாசிப்பு இயக்கத்தின் நிறுவனர் வீரபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : வீடுகள் தோறும் நூலகம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் வாசிப்பு இயக்கம் மற்றும் முன்னேற்றப் பதிப்பகம் இணைந்து, தமிழகம் முழுவதும் 330 இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தியுள்ளது. 
அதன் தொடர்ச்சியாக, சிவகங்கையிலும் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்க உள்ளது. இக்கண்காட்சியில் இலக்கியம், வரலாறு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், சிறுவர்களுக்கான நூல்கள் என ஏராளமான நூல்கள் இடம் பெற உள்ளன. 
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள சபரி மகாலில் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ள விழாவில் சிவகங்கை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதியரசர் ப.உ.செம்மல் தலைமை வகித்து கண்காட்சியை தொடக்கி வைக்க உள்ளார். 
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் தலைவர் வி.கிளாட்சன் புத்தக விற்பனையை தொடக்கி வைக்க, சிவகங்கை மாவட்ட மைய நூலக அலுவலர் ரமணி புனிதக்குமாரி அதனை பெற்றுக் கொள்கிறார்.  
வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சி, தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை  நடைபெறும். இங்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
இதுதவிர, பள்ளி, கல்லூரிகள், நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி உண்டு. இந்நிகழ்ச்சியில் தினசரி மாலை இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர்கள், வாசகர்கள் சந்திப்பு ஆகியனவும் நடைபெறும். அனுமதி இலவசம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com