திருப்புவனம் அருகே சாலை சீரமைப்புப் பணியால் அரசுப் பேருந்து நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

திருப்புவனம் அருகே கிராமங்களுக்குச் செல்லும் சாலையை சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக, அப்பகுதி பொதுமக்கள்


திருப்புவனம் அருகே கிராமங்களுக்குச் செல்லும் சாலையை சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக, அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
சிவகங்கை மாவட்டம் ஏனாதி, கண்ணாரிருப்பு, பாப்பாகுடி ஆகிய கிராமங்களுக்குச் செல்ல திருப்புவனம், மடப்புரம், தேளி, மஞ்சள்குடி ஆகிய கிராமங்கள் வழியாக சாலை உள்ளது. இந்த சாலையில், தேளி முதல் ஏனாதி கிராமம் வரை சுமார் 4 கி.மீ. தொலைவு பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்றதாகக் காணப்படுகிறது.
 இதனால், இச்சாலையில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், சில மாதங்களுக்கு முன் சீரமைக்கும் பணிகள் தொடங்கின. தற்போது பணிகள் தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சாலையோரம் சரளை கற்கள் மட்டுமே கொட்டப்பட்டு கிடக்கின்றன. மிகவும் குறுகலான சாலை என்பதால், சரளைக் கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் எதிரெதிரே வரும் வாகனங்கள் விலகிச் செல்ல முடியாத காரணத்தால், இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தினசரி தங்களது பணி நிமித்தமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று வர முடியாமல் அவதியடைந்து வருவதாகப் புகார் கூறுகின்றனர். 
எனவே, மாவட்ட நிர்வாகம் தேளி கிராமத்திலிருந்து ஏனாதி வரை பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் எனவும், நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com