"விஞ்ஞான வளர்ச்சியையும் நேசித்த மெய்ஞானி பாரதி'

தமது பேச்சாலும், எழுத்தாலும் இயற்கையை மட்டுமின்றி, விஞ்ஞான வளர்ச்சியையும் நேசித்த மெய்ஞானி பாரதி என,

தமது பேச்சாலும், எழுத்தாலும் இயற்கையை மட்டுமின்றி, விஞ்ஞான வளர்ச்சியையும் நேசித்த மெய்ஞானி பாரதி என, பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான மு. ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சிவகங்கை கிளை சார்பில், பாரதி விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலர் ச. மாரியப்ப முரளி வாழ்த்துரை வழங்கினார்.
இதில், மு. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியது: நாட்டின் கடைக்கோடியில் வாழ்ந்த மக்களிடமும் விடுதலை உணர்வைத் தூண்டியவர் பாரதி. அவர் வாழ்ந்த நாள்களில் பெண்கள் முன்னேற்றத்துக்காக மட்டுமின்றி, அவர்களுக்கான உரிமையை மீட்டுக் கொடுக்கவும் தொடர்ந்து போராடினார்.
நமது மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமைமிக்கவன். தனது பேச்சாலும், எழுத்தாலும் இயற்கையை மட்டுமின்றி, விஞ்ஞான வளர்ச்சியையும் நேசித்த மெய்ஞானி பாரதி. அத்தகு சிறப்புவாய்ந்த கவிஞனை, இனிவரும் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும் என்றார்.    
இவ்விழாவில், பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற தேவி நாச்சியப்பனுக்கு இலக்கிய விருதும், திருப்பத்தூர் அருகே கும்மங்குடியில் உள்ள விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் செயலர் எம். சொக்கலிங்கத்துக்கு தொழிற்கல்வி புரவலர் விருதும், சிவகங்கையில் உள்ள மெளன்ட் லிட்ரா ஜீ பள்ளியின் தலைவர் பால. கார்த்திகேயனுக்கு கல்வி அறங்காவலர் விருதும் வழங்கப்பட்டன.
இதையடுத்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, பாரதி விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. 
இதில், தமிழார்வலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை கிளைத் தலைவர் செ. கண்ணப்பன் வரவேற்றார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை மாவட்டப் பொருளாளர் போ. ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com