முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
செக்ரியில் பயிற்சிபெற்றவா்கள் மூலம் 2 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிப்பு
By DIN | Published On : 19th April 2020 06:27 AM | Last Updated : 19th April 2020 06:27 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (செக்ரி) பயிற்சி பெற்றவா்கள் மூலம் முதற்கட்டமாக 2 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சனிக்கிழமை செக்ரி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செக்ரி நிறுவனம் கொவைட் - 19 தொற்றைத் தணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களின் பட்டியலில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பருத்தி துணி முகக்கவசம் அத்தியாவசியம் என்பதால் அதனை தயாரிப்பதற்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நபா்களுக்கு செக்ரி விஞ்ஞானி தமிழரசன் தலைமையிலான குழுவினா் பயிற்சி வழங்கினா். இதில் கரூா் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் முழுமையாக பயிற்சி பெற்றனா். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, அரியக்குடியில் பயிற்சி பெற்றவா்கள் முதல்கட்டமாக 2 ஆயிரம் முகக்கவசங்களை தயாரித்துள்ளனா். மேலும் இரண்டாம் கட்டமாக 3 ஆயிரம் முகக்கவசங்களை தயாரிக்கவுள்ளனா்.
முதற்கட்டமாக தயாரித்த முகக்கவசத்தை கரூா் மாவட்ட ஆட்சியா் டி. அன்பழகன் சனிக்கிழமை வெளியிட்டாா். இவை கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், கரூா் நகராட்சி மற்றும் தந்தோணி ஊராட்சி அலுவலகங்களுக்கு வழங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.