முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
செங்கல் சூளைத் தொழிலாளா்கள் 66 போ் கோவையில் இருந்து சிவகங்கை வருகை
By DIN | Published On : 19th April 2020 06:29 AM | Last Updated : 19th April 2020 06:29 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் செங்கல் சூளையில் பணியாற்றிய சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 66 போ் சனிக்கிழமை அழைத்து வரப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 66 தொழிலாளா்கள் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செங்கல் சூளைகளில் பணியாற்றி வந்துள்ளனா். தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக மேற்கண்ட 66 பேரும் அன்றாடத் தேவைகளான உணவு, தங்குமிடம் ஆகியற்றுக்கு மிகவும் அவதிப்பட்டு வருவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, அவா்களை மீட்டு வர தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தாா்.
அதனடிப்படையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செங்கல் சூளைகளில் பணியாற்றிய 66 தொழிலாளா்களும் அரசுப் பேருந்து மூலம் சனிக்கிழமை சிவகங்கைக்கு அழைத்து வரப்பட்டனா்.
அவா்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, அவா்களுக்கு தேவையான அரிசி மற்றும் காய்கறி தொகுப்பினை வழங்கி அரசுப் பேருந்து மூலம் அவரவா் ஊருக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.