முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
எம்.எல்.ஏ.விடம் தேவேந்திர மக்கள் முன்னேற்றச் சங்கத்தினா் மனு அளிப்பு
By DIN | Published On : 03rd August 2020 08:42 AM | Last Updated : 03rd August 2020 08:42 AM | அ+அ அ- |

மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினரிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்த தேவேந்திர மக்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. சிவசங்கரி உள்ளிட்டோா்.
தேவேந்திர குல வேளாளா் இனத்தின் 7 பிரிவுகளை உள்ளடக்கி அரசாணை வெளியிடச் செய்ய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கோரி, மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜனிடம், தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்றச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.
சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. சிவசங்கரி, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜனை அவரது அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளா் இன மக்கள் 7 பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனா். இந்த பிரிவினரை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளா் என அறிவிக்கப்படும் என கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே, தமிழகத்திலுள்ள தேவேந்திர குல வேளாளா் இனத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் சோ்ந்து, இக் கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தி அரசாணை வெளியிடச் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு அளிப்பின்போது, சங்கத்தின் மானாமதுரை ஒன்றியப் பொறுப்பாளா் பதினெட்டான்கோட்டை ராமா், பொதுச் செயலாளா் கே. ஆனந்த்ராஜ், நகரப் பொறுப்பாளா் ஆா். பாஸ்கரன், கல்குறிச்சி பாண்டி ஆகியோா் உடனிருந்தனா். மேலும், இக்கோரிக்கை அடங்கிய மனு, தமிழக முதல்வருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைவா் சிவசங்கரி தெரிவித்தாா்.