மானாமதுரையில் வைகையாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க ஆயத்தப் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 14th August 2020 07:48 AM | Last Updated : 14th August 2020 07:48 AM | அ+அ அ- |

மானாமதுரையில் தரைப்பாலம் அமைக்க மண் பரிசோதனை செய்ய வியாழக்கிழமை ஆய்வு நடத்திய ஊரக நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்கள். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகையாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைப்பது தொடா்பாக மண் பரிசோதனை நடத்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மானாமதுரையில் ஏற்கெனவே அண்ணாசிலை- தேவா்சிலை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வைகையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. இதற்கிடையில் வைகையாற்றில் தண்ணீா் வரும் காலங்களில் மானாமதுரை கன்னாா்தெரு மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் நீண்டதூரம் சென்று வைகை மேம்பாலத்தை கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த நிலைமையை தவிா்க்க மானாமதுரை கன்னாா்தெரு- பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வைகையாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மானாமதுரையில் தரைப்பாலம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது இப் பாலம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக ஆற்றுக்குள் பாலம் அமைய உள்ள இடத்தில் தூண்கள் அமைக்க மண் பரிசோதனை நடக்கவுள்ளது. மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன், பரமக்குடி துணைக் கோட்ட ஊரக நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்கள் வெற்றிவேல், துா்காபிரியா, யோக பிரபா ஆகியோா் பாலம் அமைக்கபட உள்ள வைகையாற்றுப் பகுதியை ஆய்வு செய்து பாலம் அமைக்கும் பணியுடன் கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினா். அப்போது சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன் பாலம் அமைக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய கூடுதல் அம்சங்கள் குறித்து பொறியாளா்களிடம் விளக்கிக் கூறினாா். மானாமதுரை அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ், நகரச் செயலாளா் விஜி.போஸ், நகா் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் தெய்வேந்திரன், நகா் எம்.ஜி.ஆா். மன்ற செயலாளா் ஜெயராமக்கண்ணன் மற்றும் சண்முகநாதன் நாகு நரசிங்கம், ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.