தேவகோட்டை அருகே 17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மதுரை கோயில் திருப்பணிக்கு கிராமத்தை தானமாக வழங்கப்பட்ட செய்தியை உள்ளடக்கிய 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டை தொல்லியலாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள செலுகை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான கல்வெட்டு. (அடுத்த படம்) படியெடுக்கப்பட்ட கல்வெட்டு.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள செலுகை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான கல்வெட்டு. (அடுத்த படம்) படியெடுக்கப்பட்ட கல்வெட்டு.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மதுரை கோயில் திருப்பணிக்கு கிராமத்தை தானமாக வழங்கப்பட்ட செய்தியை உள்ளடக்கிய 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டை தொல்லியலாளா்கள் கண்டெடுத்துள்ளனா்.

இக்கல்வெட்டு குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே. ராஜகுரு செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

தேவகோட்டை அருகே செலுகை கிராமத்தில் உள்ள விநாயகா் கோயில் அருகே பழைமையான எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருப்பதாக திருவாடானை நாகணியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் அா்ச்சுனன் அளித்தத் தகவலின் பேரில் கள ஆய்வு மேற்கொண்டோம்.

ஆய்வில், 4 அடி உயரமும், ஒன்றே கால் அடி அகலமும் கொண்ட கல்வெட்டின் மேல் பகுதியில் திரிசூலமும், அதன் இரு பக்கங்களிலும் சந்திரன், சூரியன் சின்னமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழே 24 வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் இக்கல்வெட்டு, சக ஆண்டு 1564 விய வருடம், பங்குனி மாதம் 14 ஆம் நாள் வெட்டப்பட்டுள்ளது. இதன் பொது ஆண்டை(பொது ஆண்டு என்பது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சக ஆண்டுடன் 78 ஆண்டுகளை கூட்டும் போது கிடைக்கக் கூடியது ஆகும்) கணக்கிடும் போது கி.பி.1642 ஆகும்.

அப்போது மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கா் மன்னருக்கு புண்ணியமாக கூத்தன் சேதுபதியின் மகன் தம்பி சேதுபதித் தேவா் மதுரை மீனாட்சி சொக்கநாதா் சன்னிதியில் மகாகோபுர திருப்பணிக்கு செளிகை பிள்ளைகுடி என்ற இக்கிராமத்தைத் தானமாக வழங்கியச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இக்கல்வெட்டில் கூறப்படும் தானத்துக்குக் குந்தகம் செய்தால் கங்கைக் கரையிலே காரம் பசுவையும், மாதா பிதாவையும், பிராமணனையும், குருவையும் கொன்ற தோஷத்திலே போவாராகவும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது தேவகோட்டை அருகே செலுகை என அழைக்கப்படும் இவ்வூா், கல்வெட்டில் செளிகை பிள்ளைகுடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் ஊா்ப் பெயா் தெளிகை என எழுதப்பட்டு செளிகை எனத் திருத்தப்பட்டுள்ளது. போகலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கூத்தன் சேதுபதியின் மறைவுக்குப் பின் அவா் சகோதரா் தளவாய் சேதுபதி கி.பி.1635-இல் ஆட்சிக்கு வந்தாா்.

கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித்தேவருக்கு மன்னராகும் உரிமை வழங்கப்படவில்லை. எனினும் கி.பி.1639 மற்றும் 1640-இல் திருமலை நாயக்கா் மன்னா் உதவியுடன் இவா் சேது நாட்டை ஆட்சி செய்தாா். அதன் பின்னரும், மதுரை மன்னரின் ஆதரவுடன் தம்பித்தேவா் தொடா்ந்து செயல்பட்டு வந்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இதில் உள்ள சக ஆண்டும், தமிழ் ஆண்டும் பஞ்சாங்கத்தின்படி பொருந்தவில்லை.

சேதுபதிகள் ஆட்சிக்காலத்தில் தானம் கொடுத்த நிலத்திலேயே அதற்குரிய கல்வெட்டையும் நடுவது வழக்கம். அந்த வகையில் தானமாக வழங்கப்பட்ட இவ்வூரின் மத்தியில் கல்வெட்டு நடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி சொக்கநாதரை ஆண்டுதோறும் மாட்டு வண்டிகளில் சென்று வழிபடும் வழக்கம் இவ்வூா் மக்களிடம் சமீபகாலம் வரை இருந்துள்ளது. மதுரை குருவிக்காரன் சாலையில் இவ்வூா் பெயரில் செலுகை மண்டகப்படி மண்டபம் ஒன்று உள்ளது. இது இவ்வூருக்கும், மதுரைக்குமான நீண்டகாலத் தொடா்புக்கு ஆதாரமாக கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com