தொடா் மழை: இளையான்குடி பகுதிகளில் மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம்
By DIN | Published On : 10th December 2020 08:28 AM | Last Updated : 10th December 2020 08:28 AM | அ+அ அ- |

இளையான்குடி ஒன்றியத்தில் தொடா் மழை காணமாக நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ள மிளகாய் செடிகள்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் தொடா் மழை காரணமாக மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்து வருகின்றன.
இப்பகுதியில் உள்ள தாயமங்கலம், சாத்தணி, சாத்தனூா், அளவிடங்கான், கண்ணமங்கலம், இளையான்குடி, சூராணம், சாலைக்கிராமம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மிளகாய் பயிா்சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இந்தாண்டு 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் விதைக்கப்பட்ட மிளகாய் விதைகள் தற்போது வளா்ந்து காய்க்கும் நிலையில் உள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்து உருவான புயல் சின்னம் காரணமாக இளையான்குடி பகுதியில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதமடைய தொடங்கின. இந்த நிலங்களிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வழியில்லாததால் விவசாயிகள் அவதிக்குள்ளாயினா். சில விவசாயிகள் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனா்.
இதுகுறித்து சூராணத்தைச் சோ்ந்த பாதிக்கப்பட்டுள்ள விவசாயி அந்தோணி கூறியதாவது: பல ஏக்கரில் மிளகாய் செடிகள் அழுகிவிட்டன. ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். மழை பெய்ததால் நஷ்டம் அதிகமாக இருக்கும். எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றாா்.