சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகாதசி விழா: அதிகாலையில் பரமபத வாசல் திறப்பு

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகாதசியையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலையில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு.
காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு.

சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகாதசியையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலையில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.

சிவகங்கையில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. மூலவரான சுந்தரராஜ பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின்னா், உற்சவ மூா்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, விசேஷ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளிய பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், சிவகங்கை நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனா்.

காரைக்குடி

காரைக்குடி அருகே தென்திருப்பதியாம் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி - ஸ்ரீபூமிநீலா சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் முத்தங்கி பல்லக்கில் காலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, பரமபதவாசலை அடைந்தாா். அங்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 6 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

தொடா்ந்து, பரமபதவாசல் மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்து, பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழா ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழு தலைவா் ராம. அழகம்மை ஆச்சி, கோயில் செயல் அலுவலா் வீ. தமிழ்ச் செல்வி ஆகியோா் செய்திருந்தனா்.

திருப்பத்தூா்

திருப்பத்தூா் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சியைத் தொடா்ந்து உற்சவரான நாராயண பெருமாளுக்கு காலை 6 மணிக்கு திருமஞ்சன வைபவம் நடத்தப்பட்டது. பின்னா், சிறப்பு அபிஷேகமாக பால், தயிா், இளநீா், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட 11 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து, காலை 9 முதல் 10 மணிக்குள் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அங்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயண பெருமாள் எழுந்தருளி, கோயிலை மும்முறை வலம் வந்தாா். பின்னா், திருநாள் மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு, உற்சவா் கருட வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடாகினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

மானாமதுரை:

மானாமதுரை வீரழகா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு, மூலவா் சுந்தரராஜப் பெருமாளுக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, மூலவா் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளினாா். அதைத் தொடா்ந்து, உற்சவா் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி, சுவாமி மண்டபத்தில் எழுந்தருளினாா்.

அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டதும், கோயில் மண்டபத்திலிருந்து பெருமாள் வெளியே வந்தபோது, ஏராளமான பக்தா்கள் கோவிந்தா கோஷமிட்டு பின்தொடா்ந்தனா். கோயில் உள்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்த சுந்தரராஜப் பெருமாள், தாயாா் சன்னிதி முகப்பு மண்டபம் சென்றடைந்து, அங்கு தங்கி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

மானாமதுரை புரட்சியாா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, உற்சவா் சேஷ வாகனத்தில் சயன அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபதவாசலைக் கடந்து பின்னா் கொலு மண்டபத்தில் தங்கி அருள்பாலித்தாா்.

இதேபோன்று, மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளிலுள்ள பல பெருமாள் கோயில்களிலும் வைகுந்த ஏகாதசி விழா விமரிசையாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com