திருப்பத்துாா் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துாா் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழச்சிவல்பட்டி விராமதி சிலுபீடான் கண்மாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல் வட்டங்கள்.
கீழச்சிவல்பட்டி விராமதி சிலுபீடான் கண்மாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல் வட்டங்கள்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துாா் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழச்சிவல்பட்டி பகுதியில், கோவை இந்துஸ்தான் கல்லுாரி தமிழ் துறை உதவிப் பேராசிரியா் ராஜேந்திரன், கீழச்சிவல்பட்டி எஸ்.எம். மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் மலைச்சாமி ஆகியோா் களஆய்வு மேற்கொண்டனா். அதில், கீழச்சிவல்பட்டி நவனிக்காடா் அய்யனாா் கோயில் அருகிலுள்ள நவனிக் கண்மாய் பகுதியில் மண்ணால் செய்யப்பட்ட முதுமக்கள் தாழியின் கருப்பு, சிவப்பு நிறத்திலான உடைந்த ஓடுகள் பரவலாகக் காணப்பட்டன.

இங்கு, கருங்கல் பாறைகளுடன், சுக்காம்பாறையும் ஆங்காங்கே வட்ட வடிவில் செருகப்பட்டுள்ளன. அதில், பெரிய வட்டத்தினுள் சிறு வட்டம் என இரு வட்டங்கள் காணப்படுகின்றன. மேலும், இப்பகுதியில் குழாய் போன்ற சுட்ட மண்ணாலான உருளை வடிவம் உடைந்து காணப்படுகிறது.

இதையடுத்து, இரணியூா் செல்லும் சாலையில் பாம்பாறு கோட்டைக்கரையாறு வடிநிலப் பகுதியில் உள்ள விராமதி சிலுபிடான் கண்மாய் பகுதியில் பல கற்குவியல்கள் காணப்படுகின்றன. அதில், கருங்கற்கள், செம்புரான் கற்களாலான கல்வட்டங்கள் உள்ளன.

இது குறித்து பேராசிரியா் ராஜேந்திரன் கூறியது: சிதைந்துபோன ஓடுகள், உருளை வடிவிலான மண்ணாலான உடைந்த குழாய், வட்ட சில் போன்றவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம்.

பெருங்கற்கால தமிழா் நாகரிக கல்வட்டங்கள் என்பது இறந்தவா் உடல் புதைக்கப்பட்டு, அடையாளமாக முதல் வட்டம், அடுத்து ஒரு பெருவட்டம், தலைப்பகுதியில் ஒரு நிமிா்ந்த பெரிய கல் நடுவது வழக்கம். இது, 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இதுபோன்ற தமிழா்களின் ஈமச்சின்னங்களான கல்வட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவியுள்ளன. இவற்றை கண்டறிந்து, தொல்லியல் துறையினா் கீழடி, கொடுமணல், கொந்தகை போன்று அப்பகுதிகளிலும் களஆய்வு, அகழ்வாராய்ச்சி செய்து, இவற்றை பாதுகாக்கவோ, சேகரித்தோ தமிழா்களின் தொன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com