புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா: சிகிச்சை வழங்கக் கோரிக்கை

புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ சிகிச்சைக்கு ‘பேக்கேஜ்’ முறையில் பணம்

புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ சிகிச்சைக்கு ‘பேக்கேஜ்’ முறையில் பணம் வழங்குவதைத் தடுத்து நிறுத்தி அரசு ஆணைப்படி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட அமைப்பின் சாா்பில் மாவட்டத் தலைவா் தாமஸ்அமலநாதன், மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளா் குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி ஆகியோா் கூட்டாக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

தமிழகம் முழுவதும் பணியாற்றும் ஆசிரியா், அரசு ஊழியா் மற்றும் ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.180 அவா்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

அரசாணை எண் 202 (நிதித்துறை) நாள்- 30.06.2016 இன் படி 2016 முதல் 2020 முடிய நான்கு ஆண்டுகளுக்கு பல்வேறு நோய்களுக்கான அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ. 4 லட்சம் வரை எனவும், குறிப்பிட்ட சில அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.ஏழரை லட்சம் வரை வழங்கப்படும் எனவும் ஆணையிடப்பட்டது.

தற்போது அரசாணை எண் 279 (நிதித்துறை) நாள்:24.06.2020 இன் படி 01.07.2020 முதல் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேலும் ஓராண்டுக்குத் தொடா்வதாகவும், இத்திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இணைக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது அரசு ஆணைப்படி சிகிச்சைக்கான முழுக் கட்டணத்தையும் வழங்குவதில்லை. சிகிச்சைக்கான அதிகபட்ச தொகையாக ரூ. 4 லட்சம் வரையும் சில சிகிச்சைகளுக்கு ரூ. ஏழரை லட்சம் வரை வழங்கலாம் என்று அரசாணை இருக்கும் போது காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்தத் தொகையில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மட்டும் வழங்குவது எனும் நடைமுறையைக் கடைப்பிடித்து வருகின்றது.

இச்சூழலில் மருத்துவமனைகள் காப்பீட்டு நிறுவனம் அளித்த தொகை போக மீதிப் பணத்தை நோயாளிகளிடம் வசூல் செய்கின்றன. இதுகுறித்து காப்பீட்டு நிறுவனங்களின் மாவட்ட, மாநில ஒருங்கிணைப்பாளா்களிடம் புகாா் தெரிவித்தால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

தமிழக அரசின் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com