சாக்குப் பைகள் பற்றாக்குறை: சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தம்

சிவகங்கை மாவட்ட அரசு கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் இல்லை எனக் கூறி நெல் கொள்முதல் செய்யப்படுவது
மானாமதுரை அருகே ராஜகம்பீரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பல நாள்களாக கொள்முதல் செய்யப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.
மானாமதுரை அருகே ராஜகம்பீரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பல நாள்களாக கொள்முதல் செய்யப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.

சிவகங்கை மாவட்ட அரசு கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் இல்லை எனக் கூறி நெல் கொள்முதல் செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில நிலையங்களில் குறைந்த அளவிலேயே மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் வைகையாற்றுப் பாசனம் மூலம் பயனடைந்து வருகின்றன. இளையான்குடி ஒன்றியத்தில் மட்டும் விதைப்பு முறையிலும் மற்ற இரு ஒன்றியங்களிலும் நடவு முறையிலும் நெல் விவசாயம் நடைபெறுகிறது. நிகழாண்டு தொடா்ச்சியாக பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் நெல் பயிரிட்டனா். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது நிலங்களில் விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தை மாத தொடக்கத்திலேயே அறுவடை காலம் ஆரம்பமாகி மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஒன்றியங்களில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் உள்ள 45 நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் லாரிகளில் ஏற்றி தஞ்சாவூா் மாவட்டத்துக்கு அரைவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தனியாா் வியாபாரிகளைவிட கூடுதல் விலை கிடைக்கும் என்பதாலேயே விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த 15 நாள்களாக மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்களில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. தினமும் ஒரு நிலையத்தில் 1000 மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு இருந்தும், இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு தினமும் சில நூறு மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

சில மையங்களில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசு நெல் கொள்முதல் நிலைய கண்காணிப்புக் குழு உறுப்பினரான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே. வீரபாண்டி கூறியது:

சிவகங்கை மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளின் அளவு குறைவாக உள்ளது. இதுகுறித்து ஊழியா்களிடம் கேட்டால் சாக்குப் பைகள் பற்றாக்குறை எனக் காரணம் கூறி வருகின்றனா். மேலும் ஏற்கெனவே நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இதுவரை பணம் செலுத்தவில்லை. கேட்டால் பணம் வரவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனா். மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு சென்றுள்ளோம். ஆனாலும் அதே நிலைமை தான் நீடிக்கிறது.

ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். இதனால் வெயிலில் காய்ந்து நெல் மூட்டையின் எடை குறைகிறது. இரவு பனிப்பொழிவால் நெல் மணிகள் முளைத்து விடுகின்றன. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்குப் பைகள் பற்றாக்குறையை சரி செய்து மாவட்டம் முழுவதும் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

இப்புகாா் குறித்து நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கொள்முதல் செய்யப்படும் நெல்லை கொட்டி வைத்து தைப்பதற்கு சாக்குப் பைகள் பற்றாக்குறையாக உள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து சாக்குப் பைகள் வர வேண்டியுள்ளது. சாக்குப் பைகள் வந்துவிட்டால், வழக்கம்போல நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com