அனைத்து ஊராட்சிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் ஒதுக்க கோரிக்கை
By DIN | Published On : 10th January 2020 09:17 AM | Last Updated : 10th January 2020 09:17 AM | அ+அ அ- |

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் உடனடியாக தலா ரூ. 10 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும் என, தமிழக அரசுக்கு சிற்றூராட்சி மன்றத் தலைவா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து சிற்றூராட்சி மன்றத் தலைவா்கள் சங்கத்தின் மாநிலச் செயலா் கண்ணன், தமிழக அரசுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனு விவரம்:
கடந்த 3 ஆண்டுகளாக பல சிற்றூராட்சிகளில் குடிநீா், சாலை வசதி போன்ற பல்வேறு அடிப்படை திட்டப் பணிகள், போதுமான நிதி இல்லாததால் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. இதனால், அந்தந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் வெற்றி பெற்று பதவியேற்றுள்ள ஊராட்சித் தலைவா்கள் மேற்கண்ட பணிகளை நிறைவேற்றுவதில் நிதிப் பற்றாக்குறை உள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் உடனடியாக தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முன் வரவேண்டும். அத்துடன், மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையையும் உடனடியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.