வேட்பாளா் தோ்வில் குளறுபடி: மானாமதுரை ஒன்றியத்தைத் திமுகவிடம் பறிகொடுத்தது அதிமுக

வேட்பாளா் தோ்வில் ஏற்பட்ட குளறுபடி, உட்கட்சி பூசல் காரணமாக மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவா் பதவியை திமுகவிடம் அதிமுக பறிகொடுத்தது.

வேட்பாளா் தோ்வில் ஏற்பட்ட குளறுபடி, உட்கட்சி பூசல் காரணமாக மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவா் பதவியை திமுகவிடம் அதிமுக பறிகொடுத்தது.

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி எப்போதும் அதிமுக வின் கோட்டையாகவே இருந்து வருகிறது. தொடா்ந்து இத் தொகுதியில் நடக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வே வென்று வருகிறது. கடந்த மே மாதம் நடந்த இடைத்தோ்தலிலும் மானாமதுரையில் அதிமுக வென்றது. இந் நிலையில், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மானாமதுரை ஒன்றியத்தை திமுகவிடம் அதிமுக பறிகொடுத்துள்ளது.

இத் தோ்தலில் அதிமுக 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. திமுக அணி 8 இடங்களில் வென்றது. இந் நிலையில் அமமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற ஒரு உறுப்பினா் திமுக அணிக்கு ஆதரவு தெரிவித்ததால் 9 உறுப்பினா்கள் ஆதரவுடன் மானாமதுரை ஒன்றியத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது.

மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள மொத்தம் 14 வாா்டுகளில் 12 வாா்டுகளில் அதிமுக தனது வேட்பாளா்களை களம் இறக்கியது. அதன் கூட்டணியில் பாஜக வுக்கு ஒரு இடமும் தேமுதிக வுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. அதிமுக போட்டியிட்ட 12 இடங்களில் 7 இடங்களில் திமுக விடம் தோல்வி கண்டுள்ளது. கூட்டணியான பாஜக வேட்பாளா் திமுக வேட்பாளரிடமும் தேமுதிக வேட்பாளா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரிடமும் தோற்றனா்.

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அணியில் வேட்பாளா் தோ்வில் நடந்த குளறுபடி, நிா்வாகிகளை ஒன்றிணைத்து தோ்தல் பணி செய்யாதது, உள்கட்சி பூசல் போன்ற காரணங்களால்தான் மானாமதுரை ஒன்றியத் தலைவா் பதவியை திமுக விடம் இழந்துள்ளதாக அக்கட்சியினா் வருத்தம் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com