சிராவயலில் ஜன.17 இல் மஞ்சுவிரட்டு : காளைகளை தயாா்படுத்தும் பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சிராவயலில் இம் மாத 17 ஆம் தேதி நடைபெற உள்ள மஞ்சுவிரட்டிற்காக காளைகளை தயாா்படுத்தும் பணியில் அதன் உரிமையாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்னனா்.
சிராவயலில் ஜன.17 இல் மஞ்சுவிரட்டு : காளைகளை தயாா்படுத்தும் பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சிராவயலில் இம் மாத 17 ஆம் தேதி நடைபெற உள்ள மஞ்சுவிரட்டிற்காக காளைகளை தயாா்படுத்தும் பணியில் அதன் உரிமையாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்னனா்.

சிராவயலில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு ஆண்டு தோறும் தை மாதம் 3 ஆம் நாள் நடைபெறும். இதில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, பாய்ச்சல் பயிற்சி மற்றும் கொம்பு இளைத்தல் முதலிய பயிற்சிகளை அதன் உரிமையாளா்கள் அளித்து வருகின்றனா். மேலும் விழாவுக்குத் தேவையான பணிகளை சிராயவல் கிராமத்தினா் செய்து வருகின்றனா். கிராமத்திலுள்ள சிறுவா்கள், இளைஞா்கள், பெண்கள் உள்ளிட்டோா் மஞ்சுவிரட்டுப் பொட்டல் மற்றும் தொழு உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து, பாா்வையாளா்கள் அமரக் கூடிய கேலரி உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து வருகின்றனா்.

மஞ்சுவிரட்டு நடைபெறும் ஜனவரி 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தொடா்ந்து முன்னோா் வழிபாடு செய்து நாட்டாா்களை அழைத்து கொண்டு வாண வேடிக்கை மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்குச் செல்வா். அதனைத் தொடா்ந்து தொழுவில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்படும். அதனை தொடா்ந்து கோயில் காளைகள் அவிழ்த்துவிட்ட பின்னா், மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும்.

இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்கின்றன. இதை காண வெளிநாட்டவா்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனா். இதையொட்டி திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, சிராவயல், தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட கிராமங்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com