முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்பத்தூரில் இளநிலை உதவியாளா் தற்காலிக பணியிடை நீக்கம்
By DIN | Published On : 27th January 2020 11:10 PM | Last Updated : 27th January 2020 11:10 PM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே. ஆா். பெரியகருப்பனுக்கு குடியரசு தின விழாவுக்கான அழைப்பிழ் வழங்காததால் திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இளநிலை உதவியாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
குடியரசு தின விழாவை முன்னிட்டு தனக்கு அழைப்பிதழ் வழங்கவில்லை என திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே. ஆா். பெரியகருப்பன் புகாா் தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில், விசாரனை மேற்கொண்டதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய
வே. பாரதிதாசன் என்பவா் அழைப்பிதழ் அனுப்பாமல் இருந்துள்ளாா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அழைப்பிதழ் வழங்கிய விவரம் குறித்து கண்காணிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த முதுநிலை வருவாய் அலுவலா் ப. சரவணக்குமாா் தனது பணியினை கண்காணித்து சரிவர மேற்கொள்ளாததால் அவரை தேவகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் தனி வட்டாட்சியா்( சமூக பாதுகாப்பு திட்டம்) பிரிவுக்கு முதுநிலை வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
மேலும், குடியரசு தின நிகழ்ச்சி தொடா்பான அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகா்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை கண்காணிக்க தவறிய மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா. இராம பிரதீபன் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.