இளையான்குடி ஒன்றியத்தில் மணல் குவாரியை அனுமதிக்க முடியாது: கிராமக் கூட்டத்தில் மக்கள் முடிவு

இளையான்குடி ஒன்றியத்தில் தென்கடுக்கை கிராமத்தில் ஆற்று மணல் திருட்டுக்காக உவர் மண் குவாரி என்ற பெயரில் தொடங்கப்படும் குவாரியை செயல்பட அனுமதிக்க முடியாது என
இளையான்குடி ஒன்றியத்தில் மணல் குவாரியை அனுமதிக்க முடியாது: கிராமக் கூட்டத்தில் மக்கள் முடிவு

இளையான்குடி ஒன்றியத்தில் தென்கடுக்கை கிராமத்தில் ஆற்று மணல் திருட்டுக்காக உவர் மண் குவாரி என்ற பெயரில் தொடங்கப்படும் குவாரியை செயல்பட அனுமதிக்க முடியாது என கிராம மக்களும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் முடிவு செய்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களில் சவடு மண், உவர் மண் என்ற பெயரில் வைகையாற்றை ஒட்டியுள்ள தனியார் நிலங்களில் குவாரிகள் தொடங்கப்பட்டு அதில் விதிமுறைகளுக்கு எதிராக 30 முதல் 50 அடி வரை ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆற்று மணல் தோண்டி எடுத்து டிப்பர் லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசுத்துறை நிர்வாகங்கள் இந்த மணல் கொள்ளைக்கு ஆதரவாக உள்ளன. 

இந்த குவாரிகளில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அடியாட்களாக நியமிக்கப்பட்டு குவாரியை கண்காணித்து வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல் அள்ளி கொண்டு செல்லப்படுவதால் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீராதாரம் குறைந்து குடிநீர் திட்டங்களும் விவசாய பாசனக் கிணறுகளும் வறண்டு விட்டன. பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இந்த மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிலர் இந்த மணல் கொள்ளையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை நாடியுள்ளனர். 

இதற்கிடையில் இளையான்குடி ஒன்றியம் சூராணம் பிர்க்கா பகுதியில் தென்கடுக்கை என்ற கிராமம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உவர் மண்,சவடுமண் என்ற பெயரில் தனியார் நிலத்தில் குவாரி தொடங்க அனுமதி வாங்கி அங்கு ஆற்று மணல் அள்ளி விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதையடுத்து சூராணம் அருகே தென்கடுக்கை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஊர் கூட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். 

கூட்டத்தில் சூராணம் பிர்க்காவில் ஆற்று மணலை கொள்ளையடிக்க உவர் மண் என்ற பெயரில் தொடங்கப்படும் குவாரியை அனுமதிக்க முடியாது எனவும் மீறி குவாரி தொடங்கப்பட்டால் அதை எதிர்த்து கிராம மக்கள் சார்பில் பலகட்டப் போராட்டங்கள் நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் கே.வீரபாண்டி, மாவட்ட நிர்வாகிகள் அழகர்சாமி, முத்துராமலிங்கபூபதி,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இக் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்திற்கு கிளை நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com