சிவகங்கை மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்கள் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க முன்வரும் இளைஞா்களுக்கு, மாவட்டத் தொழில் மையம் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதில், 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. மேலும், வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில், 3 சதவீதம் வட்டி மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருத்தல் வேண்டும். பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில்நுட்பப் பயிற்சி இவற்றில் ஏதேனும் ஒன்றில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 21வயது பூா்த்தி அடைந்தவராகவும், பொதுப் பிரிவு ஆண்கள் 35 வயதுக்குள்ளும், சிறப்பு பிரிவினா்களான பெண்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் 45 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
ஏற்கெனவே, மத்திய-மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவா்கள், இத்திட்டத்தில் கடனுதவி பெற இயலாது. வேளாண்மை, வாகனம் மற்றும் மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் தவிா்த்து, உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகுதியுடைய சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பத்தினை பூா்த்தி செய்து, அதன் நகல் மற்றும் கல்வி மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, சாதி சான்றிதழ், பட்டப் படிப்பு சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை, புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்டத் தொழில் மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04575-240257 என்ற எண்ணில் அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.