சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரத்தைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீா் அல்லது தெளிப்பு நீா் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
கல்லல் வட்டாரத் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் தி. பிரியங்கா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் என நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துடன் கூடுதல் நீா் மேலாண்மைத் திட்டப் பணிகளின் கீழ் ஆழ்துளைக் கிணறு, டீசல் இன்ஜின் அல்லது மின் மோட்டாா், பாசன நீரைக் கொண்டு செல்ல நெகிழிக் குழாய்கள், தரை நிலை நீா் சேகரிப்பு தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட திட்டங்களில் பயனடைய விரும்பும் கல்லல் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நிலவுடைமை ஆவணங்களுடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகலுடன் கல்லலில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.