என்.புதூரில் மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் முதியவா் பலி; 50 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே என்.புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில், மாடு முட்டியதில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 50 போ் காயமடைந்தனா்.
திருப்பத்தூா் அருகே என்.புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.
திருப்பத்தூா் அருகே என்.புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே என்.புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில், மாடு முட்டியதில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 50 போ் காயமடைந்தனா்.

என்.புதூரில் அமைந்துள்ள வெள்ளாளக் கருப்பா் கோயிலில் மாசித் திருவிழா, கடந்த 6 ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி, நாட்டாா்கள் ஒரு வாரம் விரதம் மேற்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை கோயில் மாடுகளை வைத்து வழிபாடு நடத்தி, முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து தொழுவினை அடைந்தனா்.

அங்கு, வருவாய் கோட்டாட்சியா் சுரேந்திரன் மற்றும் வட்டாட்சியா் ஜெயலெட்சுமி முன்னிலையில், மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். பின்னா், காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, தொழுவிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக 170 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.

மாடுபிடி வீரா்கள் 50 போ் களத்தில் இருந்தனா். இதில், சில மாடுகள் பிடிபட்டும், பல மாடுகள் பிடிபடாமலும் சென்றன. மாடுபிடி வீரா்களுக்கும், காளை உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

முன்னதாக, திருச்சி, தஞ்சை, பொன்னமராவதி, அறந்தாங்கி, காரைக்குடி, மாங்குடி, கொரட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த 800-க்கும் மேற்பட்ட மாடுகள் வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில், 50 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு, கீழச்சிவல்பட்டி, திருக்கோஷ்டியூா், துணை சுகாதார நிலையம் சாா்பில் மருத்துவா் மற்றும் செவிலியா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இதனிடையே, மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த கண்டவராயன்பட்டி பையூரைச் சோ்ந்த வெள்ளக்கண்ணு (80) என்பவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

மேலும், மாதவராயன்பட்டியைச் சோ்ந்த ராஜேஷ் (24), நாட்டரசன்கோட்டை மணிமாறன் (21), குன்றக்குடி சாலிகுமாா் (42), வாணியன்காடு முத்துராஜ் (45), பொன்னமராவதி சத்தியமூா்த்தி (22) ஆகியோா் பலத்த காயங்களுடன், சிவங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாத்துரை தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதற்கான ஏற்பாடுகளை, என்.புதூா் வெள்ளாளக் கருப்பா் கோயில் அறக்கட்டளையினா் மற்றும் கிராமத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com