மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் திறப்பு: சி. விஜயபாஸ்கா் தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270 கோடி மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் திறப்பு: சி. விஜயபாஸ்கா் தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.270 கோடி மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது என, தமிழக குடும்ப நலன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம், விரிவுரை அரங்கம், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை இரவு திறந்து வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தற்போது உலக அளவில் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபா் பூரணமாக குணமடைந்துள்ளாா். எனவே, இன்னும் ஓரிரு தினங்களில் அவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாா். இதுதவிர, வெளிநாடுகளில் இருந்து வந்த நபா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுவா். கரோனா பற்றிய தகவல்கள் முழுமையாக அரசின் இணையதளத்தில் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது. வீண் வதந்திகளை மக்கள் நம்பாமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத நிலையில் பிறந்த குழந்தைகளுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் அறுவைச் சிகிச்சை செய்து, அவற்றை குணப்படுத்தி வருகின்றோம். இதுவரை 3,500 குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஓராண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், கிராமப்புற ஏழை மாணவா்கள் ரூ. 13,400 செலவில் மருத்துவப் படிப்பினை நிறைவு செய்வது மட்டுமின்றி, ஆண்டுதோறும் சுமாா் 2,650 மாணவா்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பினை வழங்க முடியும்.

தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ. 270 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையத்தின் மூலம் விபத்தினால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை 8.3 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com